வணக்கம்,ஆன்மீகத்தைப் பற்றி எனக்கு தெரிந்த எளிமையான விளக்கங்கள் உங்களுக்காக.

திங்கள், 9 ஜூலை, 2012

மணி அளவு:


மணி அளவு:

பெரும்பாலும் இப்போது பலரும் மிகச் சிறிய அளவுடைய மணிகளையே விரும்பிப் பூணுகிறார்கள். எனினும் உருத்திராக்க விசிட்டம் என்னும் நூலில் எந்த அளவு உருத்திராக்க மணி சிறப்புடையது என்று கூறப் பெற்றுள்ளது.

நெல்லிக்கனி அளவுள்ள மணி உத்தமமானது ;
இலந்தைக் கனிஅளவுள்ளது மத்திமம் ;
கடலை அளவுடையது அதமம்.

இதனைப் பின்வரும் வெண்பா ;

" உத்தமமே மலகத் தின்கனிக்கொப் பானகண்டி ;
மத்திம மாகும் இலந்தை வன்கனிக்கொப்பு
இத்தலத்துள் நீசஞ் சணவித் திணை யென்ன வேநினைக ;
பாசவிதம் பாற்ற நினைப் பார். "

செபமாலைக்குரிய மணிகள்:

இரண்டு முகமுடையதும் மூன்று முகமுடையதும் செபமாலைக்கு உரியது அன்று; பத்து முகமும் பதின்மூன்று முகமும் பழுதுடையது ; மற்றனைத்தும் உத்தமம்.

இதனைக் கூறும் பாடல்:

இரண்டுமுகக் கண்டிசெப மாலைக் கிசையாது
இரண்டுடன் ஒன்றும் இசையாது - இரண்டுடனே
பத்துமுக மும்பதின் மூன்றும் பழுது ;
மற்றனைத்தும் உத்தம மாமென்றுணர்.

செபத்துக்குரிய விரல்:

அங்குஷ்டத்தினால் மோட்சமும், தர்ச்சனியால் சத்துரு நாசம், மத்திமையால் பொருட்பேறும், அனாமிகையால் சாந்தியும், கனிஷ்டையால் இரட்சைணையும் .
[அங்குஷ்ட- கட்டை விரல்; தர்ச்சனி- ஆள்காட்டி விரல்; மத்திமை-நடு விரல்; அனாகிகை- மோதிர விரல் ; கனிஷ்டை- சுண்டு விரல்.]

செபிக்கும் ஒலி:

செபிக்குங்கால் மானதம் மந்தம் ஒலி என மூன்று விதமுண்டு.

மானதமாக உச்சிப்பது உத்தமம் ;
மானதம் முத்திக்கு ஏது ;
மந்தம் புத்தி சித்திக்கும்;
இழிதொழிலரே ஒலித்து உச்சரிப்பர்.

1008 செபித்தல் உத்தமம்; அதிற்பாதி மத்திமம்; 108 செபித்தல் அதமம்

"வலது கரத்தில் ஜப மாலை கொண்டு - துணியால் மறைத்துக் கொள்க; தனது குருவும் அதனைக் காண்டல் கூடாது" என்பது விதி.

செபிக்கும் காலம் உருத்திராக்க மாலை கைதவறிக் கீழே வீழின், ஜபமாலைக் கண்ணில் ஒற்றிக் கொண்டு, நன்னீராட்டி, 108 முறை காயத்திரி எண்ண வேண்டும்.

செபமாலை அறுந்து வீழின், குறைவற முன்போல் கோவையாக்கி, முறையே நீராட்டி. அகோரம் ஒரு நூறு உச்சரிக்க வேண்டும்.

பொது:

சிவபக்தருக்குக் உருத்திராக்க தானம் செய்வது சிறப்புடையது. உருத்திராக்கம் அணிந்தவரை பணிவதும் சிவ புண்ணியம். மேற்கண்டபவைகளைக் கூறியவை சிதம்பரம் மறையான சம்பந்தர் பாடி அருளிய 'உருத்திராக்க விசிட்டம் " என்னும் வெண்பா நூலில் கண்டனவாகும்.( திருவாடுவடுதுறை ஆதீனம் 1954- வெளியீடு.)

அறுபத்து மூன்று நாயன்மார்களூள் ஒருவர் மூர்த்தி நாயனார். அவரைச் சுந்தரர் திருத்தொண்டர்த் தொகையில் " மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன் " என்று துதிப்பர். தன் பொருள் "மும்மை " என்பது உருத்திராக்கம், ஜடை, திருநீறு .இந்த மூன்றையே உண்மைப் பொருள் என மதித்து வாழ்ந்தவர் மூர்த்தி நாயனார்.

பல்லவ அரசர்களில் பெரும்பாலோர் சைவ சமயச் சார்பும் பற்றும் உடையவர்கள். இதனை அவர்கள் இயற்பெயராலும் சிறப்புப் பெயர்களானும் அறியவரும். திருநாவுக்கரசரால் சைவம் சார்ந்தவனாகிய மகேந்திரன் மகன், வாதாபி கொண்ட முதலாம் நரசிம்ம வர்மன், காஞ்சிக்கு அண்மையில் கூரம் என்ற ஊரில் வித்யாவிநீத பல்லவேசுவரக்கிருதம் என்ற சிவாலயத்தைக் கட்டினான். காஞ்சி புரத்தில் கைலாச நாதர் கோயிலைக் கட்டியவன் இராசசிம்மன் என்னும் பல்லவ அரசனின் தந்தையாகிய பரமேசுவரவர்மன் மகா பலிபுரத்தில் 'கணேசர்' கோவில் என்ற சிவாலாயத்தை அமைத்தவன்.

இக்கோவிலில் பதினொரு வடமொழிச் சுலோங்ககள் கல் வெட்டில் இருக்கிறது. அவை அரசனுக்கும் சிவனுக்கும் பொருள் பொருந்தும் வண்ணம் சிலேடையாக உள்ளது. அதில் இரண்டாவது, ஆறாவது சுலோகங்களில் அவ்வரசன் உருத்திராக்க மணிகளாலான சிவலிங்கத்தைத் தலைமுடியாக அணிந்தவன் என்று அறிய வருகிறது. கருவறையில் சிவலிங்கத் திருமேனிக்கு மேல் உச்சியில் மேற்கட்டி இருப்பது காணலாம்; பெரும்பாலான தலங்களில் பட்டாடையால் அமைக்கப் பெற்றிருக்கும் திருவாரூரில் பூங்கோயிலில் "முத்து விதானம்" அமைந்திருந்ததாகத் திருநாவுக்கரசர் கூறுவர். இங்கு கண்ட முத்து உருத்திராக்க மணியாகவும் இருக்கலாம் ஆகவே கருவறையில் சிவலிங்கத் திருமேனிக்கு மேல் உச்சியில் அமைய வேண்டுவது 'உருத்திராக்க விதானம்' இதை உணர்ந்த திருப்பனந்தாள் மட ஸ்ரீகாசி வாசி நந்தித் தம்பிரான் சுவாமிகள் பல சிவ தலங்களில் அமைக்க உதவினார். அப்படி அமைந்தவற்றுள் திருவண்ணாமலையில் அருணாசலேசுவரர் காணலாம்.

.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக